என்னுடைய ஆற்றல் தெரியவே நீந்தினேன்: தைலாபுரத்தில் ராமதாஸ் பேட்டி

சென்னை: பா.ம.க.,வின் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனை நடத்திய அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், ''அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை,'' என தெரிவித்தார்.
13 பேர் பங்கேற்பு
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 16ம் தேதி, திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை, ராமதாஸ் கூட்டினார். 108 மாவட்டத் தலைவர்கள், 108 மாவட்டச் செயலர்கள் என, 216 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 13 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து, பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் ராமதாஸ், நேற்று வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், செய்தித் தொடர்பாளர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், ராமதாஸ் அளித்த பேட்டி:
இதுவரை நடந்த ஆலோசனை கூட்டங்களில், அன்புமணி பங்கேற்கவில்லை, இனி நடக்கும் கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார். அன்புமணிக்கும், எனக்கும் இடையே மனக்கசப்பு எதுவும் இல்லை. நான் எப்போதும் கசப்பை சொல்வதில்லை; இனிப்பை மட்டும்தான் சொல்வேன்.
கடந்த, 35 வாரங்களாக வியாழக்கிழமைதோறும் பத்திரிகையாளர்களை சந்தித்தேன். அப்போது, இனிப்பான செய்திகளைத்தான் கூறியிருக்கிறேன்.
கசப்பு மருந்து
நான் டாக்டர் தான். இருந்தாலும், கசப்பு மருந்துகளைக் கொடுக்க மாட்டேன்; இனிப்பான மருந்துதான் கொடுப்பேன். பா.ம.க., துணைத் தலைவர் சுப்பிரமணிய அய்யர், 'சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும், சீற்றம் குறைவதில்லை' என்றார்.
அதற்கு நான், 'சிங்கத்தின் கால்கள் பழுதும் படவில்லை; சீற்றமும் குறையவில்லை. சீற்றம் அதிகமாகி உள்ளது' என்றேன்.
அதனால்தான், நேற்று முன்தினம் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தேன். நான் எப்படி நீந்தினேன் என்பது, அதைப் பார்த்த பலருக்கும் புரியும். அதுமட்டுமல்ல, அனைவருக்கும் என்னுடைய ஆற்றலும், திறனும்கூட தெரியும். வரும் 25ம் தேதி, சமூக முன்னேற்றச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டி:மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக, பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் துணை அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, ராமதாஸ் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.பா.ம.க.,வில் எந்த நெருக்கடியும் இல்லை; சலசலப்பும் இல்லை. இப்போது, சுமூக நிலை எட்டப்பட்டுள்ளது. மிக விரைவில் ராமதாஸ், அன்புமணி சந்தித்துப் பேசுவர். கூட்டணி தொடர்பாக, இப்போது எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; ஜம்மு காஷ்மீரில் 'ஆபரேஷன் த்ராஷி' தீவிரம்
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!
-
நாடு முழுவதும் புதுப்பித்த 103 ரயில் நிலையங்களை திறந்தார் பிரதமர் மோடி!
-
ஜம்மு காஷ்மீரில் 'ஆபரேஷன் த்ராஷி' மும்முரம்... பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச்சண்டை