திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு

1

திருமலை: உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிரோன் தடுப்பு மற்றும் ஏ.ஐ., உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


உலகளவில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். எனவே, இங்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும், அவ்வப்போது, தடையை மீறி டிரோன்களை பறக்கவிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.


கடந்த ஆண்டு ஹரியானாவைச் சேர்ந்த தம்பதி ஒன்று, திருமலை சாலையில் டிரோனை பறக்கவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், திருமலையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பாதுகாப்பை பலப்படுத்தவும், பக்தர்களின் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


இது குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமலா ராவ் கூறியதாவது: கோவிலில் பக்தர்களின் தரிசன வசதியை எளிமையாக்குதல், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி வேலைகளை தடுப்பது, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுலபமாக்க, ஏ.ஐ., உள்பட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


அதுமட்டுமில்லாமல், தடையை மீறி பறக்கவிடப்படும் டிரோன்களை கண்டறிந்து தாக்கி அழிக்கும் யு.ஏ.வி., சாதனங்களையும் கோவில் வளாகத்தை சுற்றி பறக்கவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்,, தடையை மீறி போட்டோ எடுப்பது உள்ளிட்ட விதிமீறல்கள் முறியடிக்கப்படும்.


அதேபோல, கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடையாளத்தை உடனடியாக சரிபார்க்க முக அங்கீகாரம் (facial recognition) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், பக்தர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும், இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement