விதிமீறல் கட்டடங்களை இடித்து தள்ளுங்கள்: மாநகராட்சிகளுக்கு உத்தரவு

3

சென்னை : 'சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அடிப்படையில், விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும்' என, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது.


கோல்கட்டாவில் ஒரு குறிப்பிட்ட விதிமீறல் கட்டடம் மீது, அங்குள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


இதில், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜே.பி.பர்த்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர், ஏப்., 30ல் தீர்ப்பளித்தனர். அதில், 'விதிகளை மீறி கூடுதல் அளவுக்கு கட்டடங்களை கட்டிவிட்டு, அதை வரன்முறை செய்ய வாய்ப்பு கொடுப்பதை, சட்டம் எந்த நிலையிலும் அனுமதிக்காது.


எனவே, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து தள்ளியே ஆக வேண்டும். பெரும்பாலான மாநில அரசுகள், கட்டணம் வசூலித்து கொண்டு, விதிகளை மீறிய கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது கவலை அளிப்பதாக உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் எஸ்.சிவராசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், விதிமீறல் கட்டடங்களை இடிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட தீர்ப்பு நகல் இணைக்கப்பட்டு உள்ளது' என கூறப்பட்டுள்ளது.

Advertisement