வெளியூருக்கு இயக்கப்படும் மாநகர பஸ்கள்: பிளாஸ்டிக் இருக்கையால் பயணியர் அவதி

சென்னை: சென்னை மற்றும் புறநகருக்கு இயக்கப்படும் மாநகர பஸ்கள், வெளியூர்களுக்கு இயக்கப்படுவதால், அதில் பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர், தங்கள் சொந்த ஊருக்கும், சுற்றுலா இடங்களுக்கும் சென்று வருகின்றனர். எனவே, பயணியர் வசதிக்காக, வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு,1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, சென்னையில் குறுகிய துாரத்துக்கு இயக்கப்படும் மாநகர பஸ்கள், வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. குறிப்பாக, திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, வேலுார் போன்ற ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. இப்பஸ்களில் இருக்கை வசதி சரியாக இல்லாததால், அதில் பயணம் செய்யும் பயணிகள், கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: சென்னையில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும், நீல நிற மாநகர பஸ்களில், குறுகிய அளவிலான இருக்கைகள் உள்ளன. மேலும், அவை பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டவை. இதில் ஒரு மணி நேரம் அமர்ந்து பயணம் செய்தாலே, உடல் வலி ஏற்படுகிறது. கூட்ட நெரிசலின் போது, வேறு வழியில்லாமல், இந்த பஸ்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
மேலும், இந்த பஸ்கள், அதிக இடங்களில் நின்று செல்கின்றன. ஐந்து, ஆறு மணி நேரம் தொடர்ச்சியாக பயணம் செய்யும் பயணியர், அமர முடியாமல், துாங்க முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'கிளாம்பாக்கத்தில் திடீரென பயணியர் கூட்டம் அதிகமாக வரும்போது, சில நேரங்களில் மட்டும் நீல நிற மாநகர பஸ்களை இயக்குகிறோம்' என்றனர்.






மேலும்
-
மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட்டை பயன்படுத்தலாமா?
-
கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு!
-
டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!
-
மத்திய அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்!
-
சென்னை புகார் பெட்டி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது!