மண் புழு உரம் தயாரிப்பு முடக்கம் கிராமங்களில் ஆய்வு தேவை

உடுமலை : கிராமங்களில், மக்கும் குப்பையை தரம் பிரித்து, மண் புழு உரம் தயாரிக்க, கொண்டு வரப்பட்ட சிறப்பு திட்டம், முற்றிலுமாக முடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கிராமங்களில், ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிப்பு கூடம் அமைக்க, முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக, குடிமங்கலம் ஒன்றியத்தில், சில ஊராட்சிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இயற்கை உரம் உற்பத்திக்கு குடில் அமைத்து, தயாரிப்பதற்கு தேவையான தொட்டிகள் அமைக்கப்பட்டன.

கிராமங்களில், துாய்மைக்காவலர்களால் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து, மக்கும் கழிவுகளை பயன்படுத்தி, இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.

உற்பத்தியாகும் உரத்தை விற்பனை செய்து, வருவாயை ஊராட்சி நிதியில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டது.

இத்தகைய மண்புழு உரம் தயாரிப்புக்கு ஊராட்சிகளில், 90 ஆயிரம் ரூபாய் செலவில், 8 தொட்டிகளுடன் இயற்கை உரக்குடில் அமைக்கப்பட்டது. உரம் தயாரிப்பு மற்றும் உரக்குடில் பராமரிப்புக்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஆட்களும் நியமிக்கப்பட்டனர்.

சில மாதங்கள் மட்டுமே, இத்திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்பாட்டில் இருந்தது. பின்னர், மக்கும், மட்காத குப்பையை தரம் பிரிப்பதில், தொய்வு ஏற்பட்டது. இயற்கை உரக்குடிலில் அமைக்கப்பட்ட தொட்டிகளில், மக்கும் குப்பையும் நிரப்பப்படவில்லை.

தற்போது, அனைத்து ஊராட்சிகளிலும், இயற்கை உரக்குடில் காட்சிப்பொருளாகவும், சில இடங்களில் பராமரிப்பில்லாமல், மேற்கூரை, சுவர்கள் இடிந்தும் வருகின்றன. பெரும்பாலான உரக்குடில்களின் மேற்கூரை காணாமல் போய் பரிதாப நிலையில் உள்ளது.

கிராமங்களின் சுகாதார மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. இதற்காக, பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆனால், ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்களின் அலட்சியத்தால், அத்திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இப்பட்டியலில், மக்கும் கழிவுகளை உரமாக மாற்றும் திட்டமும் சேர்ந்துள்ளது.

திட்டத்தை செயல்படுத்தாமல், கழிவுகளை ஆங்காங்கே குவித்து வைத்து தீ வைத்து எரிப்பது மீண்டும் கிராமங்களில், துவங்கியுள்ளது. இச்சிறப்பு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, திருப்பூர் கலெக்டர், கிராமங்களில், ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement