கால்வாய் கரையில் கனரக வாகனங்கள்: விவசாயிகள் அதிருப்தி

உடுமலை : உடுமலை நகரை ஒட்டி, பி.ஏ.பி., கால்வாய் செல்கிறது. இதில், அரசு கலைக்கல்லுாரி அருகில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு, கால்வாய் கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ரோடு அமைக்கப்பட்டது.

இந்த ரோடு, புறநகர் பகுதியைச்சேர்ந்த வாகனங்கள், நகருக்குள் செல்லாமல் இருக்க பயன்பட்டது. கொழுமம் ரோடு, பழநி ரோடு, எலையமுத்துார் ரோடு என முக்கிய ரோடுகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டதால், சிறிய பை-பாஸ் ரோடு போல வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வந்தனர்.

கால்வாய் கரையில் அமைக்கப்பட்ட ரோட்டில், கனரக வாகனங்கள் சென்றால், கரைகள் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. எனவே, கனரக மற்றும் அதிக லோடு ஏற்றி வரும் வாகனங்கள் அவ்வழியாக செல்வதை தடுக்க, ஜீவா நகர் சந்திப்பு உட்பட இடங்களில், தடுப்புகள் வைக்கப்பட்டன.

குறிப்பிட்ட உயரத்துக்கு மேல், வாகனங்கள் செல்வதை தடுக்க இந்த இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது. இந்த தடுப்பு தற்போது இல்லை.

இதனால், அனைத்து வாகனங்களும் அவ்வழியாக சென்று ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கும் பி.ஏ.பி., கால்வாய் கரையை மீண்டும் சேதப்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து, மீண்டும் தடுப்புகள் அமைக்க அப்பகுதி மக்களும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement