ரூ.24,470 கோடியில் புதுப்பொலிவு பெற்ற 103 ரயில் நிலையங்கள்: பிரதமர் திறப்பு

சென்னை:தமிழகத்தில் ஒன்பது உட்பட, நாடு முழுதும் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை, காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

ரயில்வேயில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள், கடந்த ஓர் ஆண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

அப்பணிகள் முடிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை, ராஜஸ்தானில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். தெற்கு ரயில்வேயில், 130 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட 13 ரயில் நிலையங்களும் அதில் அடங்கும்.

தமிழகத்தில் பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய ரயில் நிலையங்கள் நேற்று புதிய பொலிவுடன் பயன்பாட்டிற்கு வந்தன.

திருவண்ணாமலை, சிதம்பரம், ஸ்ரீரங்கம் ஆகிய ரயில் நிலையங்களில், அங்குள்ள கோவில் வடிவமைப்பில் நுழைவு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையங்களில், கூடுதல் அறைகள், மின்துாக்கி, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள், நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த விழாவில், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் அன்பரசன், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் பங்கேற்றனர்.

அமைச்சர் முருகன் பேசியதாவது:

கடந்த காலங்களில் தமிழக ரயில் நிலையங்களுக்கு 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பா.ஜ., ஆட்சியில் இந்த ஆண்டு மட்டும், 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் மட்டும், 800 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை, சேலம், காட்பாடி, ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்களை போல் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 'புல்லட்' ரயில் கனவை, இந்தியாவுக்கு நிறைவேற்றி தர இருப்பவர் பிரதமர்; அடுத்த ஆறு மாதங்களில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, உலகத்திற்கு நம்மை உணர்த்தி உள்ளோம். அதனால், 50,000 கோடி ரூபாய்க்கு, நம் பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளோம். இது மிகப்பெரிய சாதனை.

இவ்வாறு முருகன் பேசினார்.

Advertisement