நாமக்கல்லில் பொது அமைப்பு சார்பில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி பேரணி
நாமக்கல்நாமக்கல்லில், ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில் பொது அமைப்புகள் சார்பில், தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.
ஜம்மு- காஷ்மீர் பஹல்காமில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம், ஆப்பரேஷன் சிந்துார் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த வெற்றிகரமான நடவடிக்கையை பாராட்டியும், ராணுவ வீரர்களுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக்கொடி பேரணி நடந்தது.
காமராஜ் தொண்டர்கள், மாவட்ட ஆன்மிக இந்து கூட்டமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாமக்கல் லாரி, டிரைலர், எல்.பி.ஜி., டேங்கர் உரிமையாளர் சங்கங்கள், ஆன்மிக இந்து சமயபேரவை, மாவட்ட விவசாயிகள் சங்கம், வணிகர் சங்கங்கள், நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் சார்பில், தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் எம்.ஜி.ஆர்., நுழைவு வாயிலில் இருந்து பேரணி துவங்கியது. முன்னாள் ராணுவ கர்னல் பழனியப்பன் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம், வணிகர் சங்க தலைவர் வாசுசீனிவாசன், பசுமை தில்லை சிவகுமார், முன்னாள் ராணுவ வீரர் சீரங்கன் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்று கையில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். உழவர் சந்தை காந்தி சிலை அருகில் பேரணி நிறைவு பெற்றது. அப்போது, தாக்குதலின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர்துாவி
அஞ்சலி செலுத்தப்பட்டது.