' ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டம்: தமிழகத்தில் திருப்பூர் முதலிடம்

திருப்பூர்:'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டத்தில், மாதந்தோறும் அதிக எண்ணிக்கையிலான வெளிமாநில கார்டுதாரர் பொருட்கள் பெறும் மாவட்டமாக திருப்பூர் உள்ளது.

'ஒரே நாடு- ஒரே ரேஷன்' திட்டம் மூலம், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதில், ரேஷன் கார்டுதாரர்கள், நாட்டின் எந்த மாநிலத்திலுள்ள ரேஷன்கடையிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில், 2020ம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம், புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர் குடும்பங்கள், சுலபமாக அருகாமை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடிகிறது.

நாட்டின் பின்னலாடை உற்பத்தி தலைநகரான திருப்பூரில், ஒடிசா, மகாராஷ்டிரா, பீஹார், ஜார்கண்ட் என, பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், குடும்பத்துடன் தங்கி, பணிபுரிந்துவருகின்றனர். 'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான வெளிமாநில கார்டுதாரர், ரேஷன் பொருள் பெறும் மாவட்டமாக திருப்பூர் உள்ளது.

திருப்பூர் மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில், 'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டம் வாயிலாக, வெளிமாநில கார்டுதாரர் ரேஷன் பொருள் பெறுவதில், திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஏப்., மாத நிலவரப்படி, தமிழக ரேஷன் கடைகளில் வெளிமாநில கார்டுதாரர் மொத்தம் 86 பேருக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ரேஷன் கடைகளில் மட்டும், வெளிமாநில கார்டுதாரர் 64 பேர் உணவுப்பொருட்கள் வாங்கியுள்ளனர். இரண்டாவது இடத்திலுள்ள சென்னையில், 8 பேர்; மூன்றாமிடத்திலுள்ள கோவையில், 2 பேர் பொருட்கள் வாங்கியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான வெளிமாநில கார்டுதாரர் அணுகும் ரேஷன் கடைகளுக்கு, அதற்கேற்ப கூடுதலாக பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement