நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்

7


புதுடில்லி: மோசமான வானிலை காரணமாக நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம், ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது எப்படி என்பது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.


கடந்த 21ம் தேதி டில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானம், மோசமான வானிலையில் சிக்கி, பின் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானிகளின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதில், விமானத்தின் முகப்பு பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக 227 பயணிகள் உயிர்தப்பினர். மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, வழக்கமான பாதையிலேயே, மோசமான வானிலையை எதிர்கொண்டு, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.


இது குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் அளித்திருப்பதாவது; டில்லியில் இருந்து கடந்த 21ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6இ 2142 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, மோசமான வானிலை நிலவியுள்ளது.


வானிலை காரணமாக சர்வதேச எல்லையை நோக்கி விலகுவதற்காக இந்திய விமானப் படையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு, பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு, அந்நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது.
ஆனால், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், வேறு வழியின்றி, மோசமான வானிலையில் விமானத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு விமானிகள் தள்ளப்பட்டனர்.


ஆலங்கட்டி மழை மற்றும் கடுமையான காற்று காரணமாக விமானம் மேலும், கீழும் தள்ளப்பட்டது. இதனால், அதிகபட்ச இயக்க வேகத்தில் விமானம் செலுத்தப்பட்டது. இந்த சமயத்தில் விமானம் நிமிடத்திற்கு 8,500 அடி கீழ் இறங்கிய போதிலும், பைலட்டுகள் சிறப்பாக செயல்பட்டு, ஸ்ரீநகரில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இதில், யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. விமானத்தின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement