தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

10


சென்னை: தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் ரூ.3 லட்சம் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு தி.மு.க., வட்ட செயலாளர் அனிஷ்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், குவாரி உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். தி.மு.க.,வினரின் தொடரும் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த நான்கு வருடங்களில், ரூ.75 லட்சம் வரை, குவாரி உரிமையாளரிடமிருந்து இந்த தி.மு.க., வட்ட செயலாளர் வசூலித்திருப்பதாகத் தெரிகிறது. தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது.


விசாரணை வளையத்தில் இருந்து ஊழல்வாதிகளைக் காப்பாற்ற, மக்கள் வரிப்பணத்தில் சுப்ரீம் கோர்ட் வரை செல்லும் முதல்வர் ஸ்டாலின், தனது கட்சிக்காரர்களிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.


அனைத்துத் துறைகளிலும் ஊழல்,கனிம வளங்கள் கொள்ளை, தி.மு.க., குறுநில மன்னர்களின் கட்டாய வசூல், யாருக்குமே பாதுகாப்பில்லாத சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என, இருண்ட காலத்தில் தமிழகம் தள்ளாடுகிறது. ஆனால், இவை குறித்து எந்தக் கவலையும் இன்றி, கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement