ஆதார் எடுப்பதற்கு சிறப்பு முகாம் நடத்துங்க மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தல்

உடுமலை : பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்துவதற்கு பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ், உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆனால், மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகள் புதுப்பிக்கப்படாமல் இருப்பது மற்றும் ஆதார் புதுப்பித்தல், ஆதார் எண்கள் வேறு வங்கிக்கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருப்பது, ஆதார் எண் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அரசின் சார்பில், மாணவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு செலுத்தப்பட்டிருக்கும். ஆனால் அந்தத்தொகை பெற முடியாமல் வங்கிகளால் முடக்கப்படுவது அல்லது மீண்டும் திருப்பி அனுப்பப்படுவதுதான் அடிக்கடி நடக்கிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, மாணவர்களுக்கு ஆதார் புதிதாக எடுப்பதற்கும், வங்கிக்கணக்குகளுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கும், புதுப்பித்தல் பணிகளுக்கும் கடந்த கல்வியாண்டில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

ஆனால் முகாமில், 60 சதவீத மாணவர்கள் தான் பயன்பெற்றுள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் முகாமின் போது பள்ளிக்கு விடுப்பு எடுத்திருப்பது, முறையான வங்கிக்கணக்குகள் இல்லாதது போன்ற காரணங்களால் விடுபட்டு விட்டனர்.

விடுபட்ட மாணவர்களுக்கென மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவில்லை. உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், இந்த பிரச்னையால் பல மாணவர்களுக்கு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருப்பதாக, பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்.

பொது மையங்களை அணுகினாலும், கால தாமதம் ஆவது மற்றும் தொலைதுாரப்பகுதிகளிலிருந்து அடிக்கடி வர முடியாதது போன்ற காரணங்களால், ஆதார் எடுக்க முடிவதில்லை.

விடுமுறை முடிவதற்குள், ஆதார் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதி பள்ளிகளில் நடத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement