பஞ்சாயத்துகளில் உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை வாபஸ் பெற வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்

சென்னை; பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம், மணல் கொள்ளை, டாஸ்மாக் கொள்ளை என்று அனைத்துத் துறைகளிலும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று அதிகரித்து வரும் ஊழல், இதன் காரணமாக இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
இதுதான் 48 மாதகால அலங்கோல ஆட்சியின் வேதனைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், 2024-2025ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து பகுதிகளில் புதிதாக வீடு கட்டியவர்கள் மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள், வீட்டின் கட்டுமானப் பரப்பை அளந்து வரி நிர்ணயம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் புதிய சட்டத்தின்படி ஒரு சதுர அடிக்கு கட்டட வரைபடக் கட்டணமாக சுமார் 37 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும், 2024-2025ம் ஆண்டுவரை ஓலைக் குடிசை ஒன்றுக்கு ரூ. 44ம், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடு ஒன்றுக்கு ரூ. 66ம், கான்கிரீட் வீடு ஒன்றுக்கு ரூ. 121ம் வீட்டு வரியாக செலுத்தி வந்தனர். மேலும், வீட்டு வரி ரசீதில் வீட்டின் பரப்பளவு குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது, உயர்த்தப்பட்ட சொத்து வரியின்படி, 2025-2026 முதல், இனி ஓலைக் குடிசைகளுக்கு அதிகபட்சமாக சதுர அடி ஒன்றுக்கு 40 பைசா முதல் 1 ரூபாய் வரையும், ஓட்டு வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 30 பைசா முதல் 60 பைசா வரையும், கான்கிரீட் வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரையும், வீட்டு வரி உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள பழைய வீடுகளுக்கும் இந்த வரி உயர்வின்படி புதிய வரியை வசூலிக்க வேண்டும் என்றும் தி.மு.க., அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது.
கடந்த 2024-2025ம் ஆண்டு முதல் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள புதிய வரிவிதிப்பு ஆன்லைன் சேவையை அரசு முடக்கி வைத்துள்ளதால், புதிதாக வீடு கட்டிய மக்கள், வரி நிர்ணயத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கிராமங்களில் வரைபட அனுமதிக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் வயிற்றில் அடித்து, அலங்கோல கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் அரசு, பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு: பிரதமர் மோடி பேச்சு
-
ஆந்திராவில் காரும், லாரியும் மோதி விபத்து; 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி
-
ராகுலுக்கு சிக்கல்: ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த ஜார்க்கண்ட் கோர்ட்
-
இந்திய அணிக்கு புதிய கேப்டன் சுப்மன் கில்; அணியில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு
-
உலக அமைதிக்காக 'மதுரையில் பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
இன்று ஆரஞ்சு, நாளை ரெட் அலர்ட்; பருவமழை குறித்து முழு விபரம் இதோ!