தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன

3



சென்னை: 'தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த, 'செமிகண்டக்டர்' தொழிற்சாலை, உத்தர பிரதேசத்திற்கு சென்றது வியப்பு அளிக்கிறது. தமிழக அரசு மிகப்பெரிய வாய்ப்பை நழுவ விட்டிருப்பது வருந்தத்தக்கது' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



உ.பி., மாநிலம், கவுதம புத்தா மாவட்டம் ஜேவாரில், எச்.சி.எல்., - பாக்ஸ்கான் நிறுவனங்கள், 3,706 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கும், 'செமிகண்டக்டர்' ஆலைக்கான ஒப்புதலை, மத்திய அரசு கடந்த 14ம் தேதி வழங்கியுள்ளது.


இது, மொபைல் போன், லேப் டாப், வாகனங்களுக்கான, 'வேபர்ஸ்' உருவாக்கும் தொழிற்சாலையாக அமைய உள்ளது.


வரும் 2027ல் உற்பத்தியை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தொழிற்சாைலை தமிழகத்தில் துவக்கப்பட இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது.


இந்நிலையில், உ.பி.,யில் துவங்குவது வியப்பு அளிக்கிறது. தமிழக அரசு மிகப்பெரிய வாய்ப்பை நழுவ விட்டிருப்பது வருந்தத்தக்கது.



உற்பத்தி மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்று பெயர் பெற்ற தமிழகம், இந்த விவகாரத்தில் தவறிழைத்ததா? அல்லது உ.பி., மாநிலம், தமிழகத்தை விட அதிக சலுகைகளை வழங்கியுள்ளதா?

சென்னை விமான நிலைய விரிவாக்கம் தடைபட்டு வருவதும், தி.மு.க., அரசின் கொள்கை முடக்குவாதமும், தொழில் துறை குறித்த அலட்சியமும் தான் மிக முக்கிய காரணங்கள்.



இந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்களில் கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தமிழக அரசு நத்தை வேகத்தில் நகர்வது இனியும் நல்லதல்ல.


சூரியசக்தி, காற்றாலை மின் திட்டங்களில் முதன்மையாக உள்ளதாக நாம் பெருமை கொண்டிருந்த காலம் மாறிப்போய், இன்று, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதிக உற்பத்தி செய்கின்றன.

பல்வேறு துறைகளில் பல மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தை பின்னுக்கு தள்ளி வருகின்றன. அம்மாநிலங்கள் முன்னேறி வருவதை தமிழக அரசும், முதல்வரும் உணர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.


பழம் பெருமை பேசி பயன் இல்லை என்பதை உணருமா, தமிழக அரசு?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement