களக்காட்டூர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஹோமங்கள்

களக்காட்டூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில், கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஒரு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது.

ஆண்டுதோறும் தை மாதத்தில் வனபோஜன உத்சவத்தின்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இக்கோவிலில் எழுந்தருள்வார்.

இந்த கோவிலை ஹிந்து சமய அறநிலையத் துறையினர், முறையாக பராமரிக்காததால், கோவில் சுவரில் விரிசல் ஏற்பட்டும், கோபுரத்தில் செடிகள் வளர்ந்தும், சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, இக்கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டி, களக்காட்டூர் கிராமத்தினர் சார்பில் நேற்று, சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பட்டாச்சாரியார் முகுந்தன் தலைமையில் நடந்த இந்த ஹோமத்தில், அர்ச்சகர் சத்யநாராயணன் உட்பட கிராமத்தினர் பலர் பங்கேற்றனர்.

Advertisement