3,250 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நால்வர் சிக்கினர்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி - நந்திவரம், கற்பகாம்பாள் முதல் தெருவில், சிலர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக, நேற்று முன்தினம் மாலை, குடிமைப் பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று, ஒரு மறைவான இடத்தில், 'அசோக் லேலண்ட் டோஸ்ட்' வாகனம் வாயிலாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை கண்டுபிடித்தனர்.

கடத்தலில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம், அம்மன் நகரை சேர்ந்த பார்த்திபன், 31, கூடுவாஞ்சேரி, நந்திவரம் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார், 23, அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், 23, சின்ன காஞ்சிபுரம், வேகவதி சாலையைச் சேர்ந்த அப்துல் ஹமீது, 24, என தெரிந்தது.

அவர்களிடமிருந்து, 65 மூட்டைகளில், 3,250 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, இரண்டு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின், நால்வரும் செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட அசேன் ரசாக் என்பவரை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement