குழாயில் மோட்டார் பொருத்தி விடுதி,ஹோட்டல்கள் குடிநீர் திருட்டு: ஆதரவு தந்து 'கல்லா' கட்டும் கவுன்சிலர்களால் சிக்கல்

சென்னையில் தெரு மற்றும் பிரதான குழாய்களில் சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி, விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள், குடிநீர் திருட்டில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக ஆங்காங்கே போராட்டம் நடத்துவரும் நிலையில், சமீபத்தில் ஆய்வு நடத்திய வாரிய அதிகாரிகள், சட்டவிரோத மோட்டார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளில், 16.80 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும் 106 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடிநீர், சென்னையைச் சுற்றி உள்ள ஐந்து ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு, 135 லிட்டர் தண்ணீர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வீட்டுக்கு, 800 முதல் 1,500 லிட்டர் வரையே தினமும் வழங்கப்படுகிறது.
எனினும், பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. கிடைக்கும் இடங்களிலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து, துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுகிறது. சில பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் இருப்பதில்லை என, ஆங்காங்கே சாலை மறியல், போராட்டம் நடக்கிறது.
தேவைக்கேற்ப குடிநீர் விநியோகம் உள்ள நிலையில், பற்றாக்குறை ஏற்படுவது குறித்து, வாரிய பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
தெரு மற்றும் பிரதான குழாய்களில் சோதனை செய்தபோது, பல பகுதிகளில் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள், சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி, குடிநீர் திருடுவது தெரிந்தது.
இதையடுத்து, சென்னை முழுதும் தொடர்ந்து நடத்திய சோதனையில், 20 நாட்களில், 250க்கும் மோட்டார்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தவிர, சட்ட விரோதமாக மோட்டார் பொருத்திய விடுதி, ஹோட்டல்களுக்கு முறையே, 10,000, 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக, அடையாறு மண்டலத்தில், 140 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சில பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டுள்ள மோட்டார்களை பறிமுதல் செய்யவிடாமல், உள்ளூர் கட்சிகாரர்கள், கவுன்சிலர்கள் முட்டுக்கட்டை போடுவதாக, வாரிய அதிகாரிகள் புலம்புகின்றனர். குடிநீர் திருட்டுக்கு உடந்தையாக இருந்து, 'கல்லா' கட்டுவதே காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஐ.டி., உள்ளிட்ட தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகளில், புற்றீசல் போல் விடுதிகள் அதிகரித்துள்ளன. ஒரு விடுதிக்கு, 1,300 லிட்டர் வரை குடிநீர் விநியோகிக்கப்படும். அதற்கு மேல், லாரி குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
ஆனால், குழாயில் சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி, தினமும் 10,000 லிட்டர் வரை குடிநீரை திருடுகின்றனர். சமீபகாலமாக, சில ஹோட்டல்களும் குடிநீரை திருட ஆரம்பித்துள்ளனர்.
தவிர, சென்னையில் கட்டுமான பணி நடக்கும் பல இடங்களில், தகர ஷீட் கொட்டகை, சிறிய வீடு எடுத்து தொழிலாளர்கள் தங்கவைக்கப்படுகின்றனர்.
பொதுவாக, 20 பேர் தங்க வேண்டிய இடத்தில் 150 பேர் வரை தங்கியுள்ளனர். இதனாலும், குடிநீரில் தேவை அதிகரிப்பதால், குழாயில் மோட்டார் பொருத்தி, குடிநீரை திருடுகின்றனர்.
இதன் காரணமாகவே விடுதிகள், ஹோட்டல்கள் உள்ள தெருக்களில், வீடுகளுக்கு குடிநீர் செல்வதில்லை. இதனால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.
விடுதிகள், ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்களுக்கு சாதகமாக செயல்படும் கட்சிக்காரர்கள், மக்களுக்கு பணம் கொடுத்து போராட்டம் நடத்த சொல்கின்றனர்.
அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தான், குடிநீர் திருட்டை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடல்நீரை சுத்தம் செய்து குடிநீராக வழங்க, 1,000 லிட்டருக்கு, 52 ரூபாய் செலவாகிறது. அதுவே, ஏரி நீரை குடிநீராக மாற்ற, எட்டு ரூபாய் ஆகிறது. ஐந்து பேர் உடைய வீட்டுக்கு, தினமும் 20 ரூபாய் செலவில் குடிநீர் வழங்கப்படுகிறது. லாரி குடிநீர் வாங்க செலவு அதிகமாவதால், விடுதிகள், ஹோட்டல்களில் மோட்டார் பொருத்தி குடிநீரை திருடுகின்றனர்.தவிர, நீர்நிலைகளில், குப்பை கொட்டுவது, கழிவுநீர் கலப்பது போன்ற செயல்களை கண்காணித்து, அபராதம் விதிக்க, வாகனங்களை பறிமுதல் செய்ய, 2024 ஜூன் மாதம், மாநகராட்சியில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மண்டலங்களிலும், இரண்டு முதல் மூன்று வாகனங்களில், இந்த கண்காணிப்பு குழு ரோந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறது. குடிநீர் திருட்டு மற்றும் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பை தடுக்க, குடிநீர் வாரியம் சார்பில் பறக்கும் படை அமைக்க வேண்டும். ஏற்கனவே, சென்னையில் வறட்சி ஏற்பட்டபோது, குடிநீர் திருட்டை தடுக்க, வாரியம் சார்பில் பறக்கும் படை வாரியம் அமைக்கப்பட்டது. அதை நிரந்தமாக அமைத்தால், சீரான குடிநீர் வழங்க முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
- நமது நிருபர் -

மேலும்
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
-
பா.ஜ., தலைவரை சந்தித்த நிர்வாகிகள்; கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,வில் சலசலப்பு