பஸ் வருகை 'டிஜிட்டல்' பலகை 500 நிறுத்தங்களில் அமைகிறது

சென்னை:சென்னையின் முக்கிய வழித்தடங்களில், ஒரே நேரத்தில் வரிசையாக மூன்று மாநகர பேருந்துகள் செல்கின்றன. தவிர, குறிப்பிட்ட நேரத்தில், சீரான பேருந்து இயக்கம் இல்லை.
இதனால், பேருந்து நிறுத்தங்களில் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என, பயணியர் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பேருந்துகளை சீராக இயக்கவும், பயணியருக்கான தகவலை அளிக்கவும், நுண்ணறிவு போக்குவரத்து திட்டத்தை, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.
இதற்காக, மாநகர பேருந்துகளில் அதிநவீன ஜி.பி.எஸ்., கருவிகள் நிறுவுதல், கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைப்பு, பேருந்து நிறுத்தங்களில் 'டிஜிட்டல்' பலகைகள் நிறுவும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் சோதனை முயற்சியாக, அண்ணாசாலை, ராஜாஜி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர்., உட்பட பிரதான சாலைகளில் உள்ள நிறுத்தங்களில், இந்த டிஜிட்டல் பலகை வசதி வர உள்ளது.
இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
நுண்ணறிவு போக்குவரத்து திட்டத்தின் கீழ், 'சிட்டி பஸ் சிஸ்டம்' என்ற புதிய முறையை செயல்படுத்தி வருகிறோம்.
பேருந்து வருகை, புறப்படும் நேரம் குறித்து பயணியர் தகவல் பெறும் வகையில், 500 நிறுத்தங்கள் மற்றும் 71 பேருந்து நிலையங்களில், எல்.இ.டி., டிஜிட்டல் பலகை அமைக்கப்பட உள்ளது.
பயணியர், தங்களது மொபைல்போன் செயலி வாயிலாக, பேருந்து வரும் நேரம் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் சோதனை முயற்சியாக அண்ணாசாலையில், இரண்டு நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 500 நிறுத்தங்களிலும், இதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. செப்., மாதம் இறுதிக்குள் 500 நிறுத்தங்களிலும் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.