புதுச்சேரியில் 7 மையங்களில் யு.பி.எஸ்.சி., முதனிலை தேர்வு

புதுச்சேரி : மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) முதனிலை தேர்வு, புதுச்சேரியில், 7 மையங்களில் நேற்று நடந்தது.
புதுச்சேரியில், இந்திய குடியியல் பணிகள் முதனிலை தேர்வு நேற்று முதலியார்பேட்டை, அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி, லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காஞ்சி மாமுனிவர் முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 மையங்களில் நடந்தது.
புதுச்சேரியில், 2 ஆயிரத்து 254 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தினர். அதில், 842 பேர் தேர்வு எழுத வரவில்லை. 7 மையங்களில் பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வர்களை பல்வேறு கட்டுபாடுகளுடன் அனுமதித்தனர்.
நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில், தேர்வு எழுத சென்றவர்களுக்கு புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதே போல, தேர்வு மையங்களில் இருந்து பஸ் நிலையத்திற்கு வருவதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.