சென்னையை மிரட்டும் 'பைக் ரேஸ்'; நள்ளிரவில் பந்தயம் வைத்து ரகளை

17

சென்னை: சென்னையில், மக்களை பதற வைக்கும் வகையிலும், விபத்துகளுக்கு வழி வகுக்கும் வகையிலும், இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்கள் மீண்டும் தலைதுாக்க துவங்கி உள்ளன.


நேற்று முன்தினம் நள்ளிரவில், கோயம்பேடு முதல் அடையாறு வரை 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பைக் ரேஸ் சென்றுள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு மத்தியில், அதிவேகமாகவும் தாறுமாறாக இயக்கியதால், வாகன ஓட்டிகளை பீதியடைந்தனர்.


ஆன்லைன் குழுவில் பதிவு செய்து நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் ஓர் இடத்தில் குவியும் இளைஞர்கள், அதிகாலை 1:00 மணிக்கு மேல் பைக் ரேஸ் துவங்குவதாக கூறப்படுகிறது.


குறிப்பாக, 10 கி.மீ., துாரத்தை மூன்று நிமிடங்களில் கடக்க வேண்டும் எனவும், பைக்கின் வேகம் 120 முதல் 130 கி.மீ., வரை தாண்டி இருக்க வேண்டும் எனவும், பல ஆபத்தான விதிகளை வைத்து ரேஸ்களில் ஈடுபடுகின்றனர்.


வெற்றி பெறுவோருக்கு 20,000 ரூபாய் வரை பரிசு தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரேஸ் துவங்குவது முதல் முடியும் வரை நேரலையில் வெளியிடப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.


இது குறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பைக் ரேஸ் நடத்திய இளைஞர்களின் வாகனங்களில் பதிவு எண் தகடு இல்லை. இருப்பினும், போக்குவரத்து புலனாய்வு போலீசார், அடாவடி இளைஞர்களை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.


கோயம்பேடு - அடையாறு வரையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில், அண்ணா நகரைச் சேர்ந்த ஐந்து பேரின் விபரங்கள் கிடைத்துள்ளன. அவர்களை தேடி வருகிறோம்.


ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது, 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement