கடையில் திருடி கூல்டிரிங்க்ஸ் குடித்து 'ரெஸ்ட்' 'லைவ்வாக' பார்த்து மடக்கிய உரிமையாளர் பல நாள் திருடனை வளைத்த தொழில்நுட்பம்

ஈரோடு, சிவகிரி, முத்துார் சாலை, திரு.வி.க.தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 47; இங்குள்ள டாஸ்மாக் கடை அருகே கடை வைத்துள்ளார்.

மாலை நேரத்தில் முட்டை, ஆம்லெட், பணியாரம் தயாரித்து விற்கிறார். சில மாதங்களாகவே இரவில் கடையில் அடிக்கடி திருட்டு போனது. இதனால் திருட்டை கண்டுபிடிக்க கடையில் 'சிசிடிவி' கேமரா பொருத்தினார். இந்நிலையில் கடந்த, 25ம் தேதி நள்ளிரவில், கடை பின்புற தட்டியை நகர்த்தி உள்ளே புகுந்த ஆசாமி, ௧௦ சிகரெட் பாக்கெட், ஒரு பீடி பண்டலை திருடினார். பிறகு பிரிட்ஜ்ஜில் இருந்த குளிர் பானங்களை குடித்துவிட்டு இளைப்பாறி கொண்டிருந்தார்.


அதேசமயம் ராஜேந்திரன், 'சிசிடிவி' கேமராவை தனது மொபைல் போனில் இணைத்திருந்தார். இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். நண்பர்கள், உறவினர்களை அழைத்துக்கொண்டு கடைக்கு விரைந்தார்.
அப்போது வந்த வழியே தப்ப முயன்ற திருச்சி, கருப்பூர் அழகு கவுண்டன்பட்டி, அம்மன் கோவில் வீதியை சேர்ந்த பழனிச்சாமியை, 45, சுற்றி வளைத்து பிடித்து, போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

Advertisement