குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் தண்ணீர் வெளியேறி வீணாகும் அவலம்

நாமக்கல் :கடந்த, 10 நாட்களாக, குடிநீர் குழாய் உடைந்து, சாலையில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


நாமக்கல் மாநகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. அதில் குடியிருக்கும் மக்களுக்கு மோகனுார்-ஜேடர்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்யும் போது, ஆங்காங்கே குழாய் உடைந்து, தண்ணீர் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது. அவற்றை, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் சென்று சரி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட, 9வது வார்டு சின்ன அய்யம்பாளையம் பகுதியில், கடந்த 10 நாட்களாக குழாய் உடைந்து, தண்ணீர் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது. அதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து, மாநகராட்சிக்கு புகார் அளித்தும், குழாயை சரி செய்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தவில்லை. நிர்வாகத்தின் மெத்தனத்தால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி
உள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக, 1,000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. அதனால், காவிரி ஆறு தண்ணீர் இன்றி, வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், உடைந்த குழாயை சரி செய்யாமல், தண்ணீர் வீணடிக்கப்படுவது, பல்வேறு தரப்பினரையும் கடும் அதிர்ச்சி அடைய
செய்துள்ளது.

Advertisement