'பர்னிச்சர் பார்க்' நிறுவனத்திற்கு சீன இயந்திரங்கள் இறக்குமதி

துாத்துக்குடி:துாத்துக்குடியில், சர்வதேச பர்னிச்சர் பார்க்கில் புதிதாக துவங்கப்பட உள்ள நிறுவனத்திற்காக, சீனாவில் இருந்து 310 இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
'துாத்துக்குடி சிப்காட் பகுதியில், 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாக, 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சர்வதேச பர்னிச்சர் பார்க் அமைக்கப்படும்' என, 2021 -- 22 பட்ஜெட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
வேலை வாய்ப்பு
தொடர்ந்து, 2022 மார்ச், 7ல் பர்னிச்சர் பார்க் பணிக்காக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, இரண்டு நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
மேலும், 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டார். அப்போது, 2,845 கோடி ரூபாய் முதலீடும், 11,450 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், துாத்துக்குடி, சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில், 1,156 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச பர்னிச்சர் பார்க் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக சென்னையை தலைமையிடமாக கொண்ட 'கிரஸ்ட் லாஸ்சிங் அண்டு பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம், முழுமையாக பணிகளை முடித்துள்ளது.
அடிப்படை வசதி
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த, 'எம்.டி.எப்., போர்டு' நிறுவனம், விரைவில் உற்பத்தியை துவங்கும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, சீனாவில் உள்ள, 'சைலோசுயிஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 310 ராட்சத இயந்திரங்கள், ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து, கப்பல் வாயிலாக துாத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு நிறுவனம், மரங்கள் வாயிலாக, வீடுகளை கட்டுவது தொடர்பான பர்னிச்சர்களை உற்பத்தி செய்ய உள்ளது.
சிப்காட் தொழில்பேட்டை அதிகாரிகள் கூறுகையில், 'சர்வதேச பர்னிச்சர் பார்க்கில், இதுவரை மூன்று நிறுவனங்கள் வந்துள்ளன.
வேறு நிறுவனங்கள் வருவது தொடர்பாக சென்னையில் உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
நிறுவனங்களுக்கு தேவையான சாலை வசதி, மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.
மேலும்
-
நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்
-
குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு நெல் குவின்டாலுக்கு ரூ.69 உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
-
லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி
-
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..
-
டிரான்ஸ்பர் தவிர்க்க ரூ.6 லட்சம் கட்டணம்; பொறியாளர்கள் புகாரால் திடீர் சலசலப்பு