கார் - லாரி மோதல் டயர் வியாபாரி பலி

ராயக்கோட்டை கர்நாடகா மாநிலம், பெங்களூரு தொட்டமாவள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ், 47. பழைய டயர்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா, 42. இருவரும் மாருதி சுசூகி வேகனர் காரில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாருக்கு நேற்று காலை சென்றனர்.

சுமன் என்பவர் காரை ஓட்டி செல்ல, முன்பக்க சீட்டில் சதீசும், பின்பக்க சீட்டில் சத்யாவும் அமர்ந்திருந்தனர்.
ராயக்கோட்டை அடுத்த கருக்கம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே காலை, 8:00 மணிக்கு சென்றபோது, எதிரே டயர்கள் ஏற்றி வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்த சதீஷ் இறந்தார். மனைவி சத்யா, ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement