போலீசார் மெத்தனத்தால் கழிப்பறை இடிப்பு ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதி புகார்

இடைப்பாடி, இடைப்பாடி, குஞ்சம்பாளையத்தை சேர்ந்தவர் அய்யனார், 45. இவரது குடும்பத்தினருக்கும், பங்காளிகள் குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு உள்ளது. அய்யனாருக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட நிலத்தில் கழிப்பறை கட்டி உபயோகப்படுத்தி வந்தார். அவர்களிடையே ஏற்பட்ட தகராறில், 'கழிப்பறையை இடித்துவிடுவோம்' என, அய்யனாரிடம் அவரது பங்காளிகள் கூறினர்.

இதனால் அய்யனார், நேற்று முன்தினம் பூலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இருதரப்பினரையும் நேற்று விசாரணைக்கு போலீசார் அழைத்தனர். அய்யனார், அவரது மனைவி பழனியம்மாள், ஸ்டேஷனுக்கு வந்தனர். அப்போது அவரது பங்காளியான ஆறுமுகம் உள்பட, 5 பேர், பொக்லைன் மூலம் கழிப்பறையை இடித்தனர். இதை அறிந்த அய்யனார், 'போலீசாரின் மெத்தனப்போக்கால் கழிப்பறை கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது' என கூறினார். தொடர்ந்து ஸ்டேஷன் முன் அவரும், பழனியம்மாளும், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் உடனே தடுத்து, தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின் இது
குறித்து அய்யனார் புகார்படி, கழிப்பறையை இடித்த ஆறுமுகம், 45, மீது வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Advertisement