மழையால் நிரம்பிய குந்தா அணை; 2 மதகுகளில் நீர் வெளியேற்றம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நேற்றும் கனமழை தொடர்ந்தது. அவலாஞ்சியில் மூன்று நாட்களில், 100 செ.மீ. , மழை பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை நீரோடைகளில் வழக்கத்தை விட நீர்வரத்து அதிகரித்தது.
குந்தா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, ஒசஹட்டி, பிக்குலி, தங்காடு நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான, 89 அடியை எட்டியது.
வினாடிக்கு, 400 கன அடி நீர்வரத்து உள்ளது. இரண்டு மதகுகளில் தலா, 200 கன அடி வீதம் நேற்று மாலை வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. பிற அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
மழையால், ஊட்டி அருகே இத்தலார் -பெம்பட்டி சாலையில் மண்சரிவு, மஞ்சன கொரை அன்பு அண்ணா நகரில் வீடுகள் சேதமான பகுதிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
சூறாவளி
தமிழகம் - கேரளாவை இணைக்கும் போடிமெட்டு மலைப்பாதையில், கனமழையுடன் சூறாவளி வீசுவதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இங்கு ஐந்தாவது வளைவு பகுதியில் உள்ள காற்றாடி பாறை அருகே, சூறாவளி ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணியர் சிலர் நின்று, மொபைல் போனில் 'செல்பி' எடுத்துச் செல்கின்றனர்.
வெள்ள அபாயம்
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், எட்டாவது நாளாக நேற்று தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.
அணை நீர்மட்டமான மொத்தமுள்ள, 52 அடியில், நேற்று, 51 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில், தென்பெண்ணை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகமாக உள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சில நாட்களாக பெய்து வரும் மழையில் ஏற்கெனவே, 30 வீடுகள் இடிந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மேலும், 18 வீடுகள் இடிந்தது. பல இடங்களிலும் மரக்கிளைகள் முறிந்து, மின்சாரம் தடைபட்டுள்ளது.
மேலும்
-
நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்
-
குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு நெல் குவின்டாலுக்கு ரூ.69 உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
-
லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி
-
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..
-
டிரான்ஸ்பர் தவிர்க்க ரூ.6 லட்சம் கட்டணம்; பொறியாளர்கள் புகாரால் திடீர் சலசலப்பு