பண்ணந்துாரில் கோவில் திருவிழா நடத்த இருதரப்பிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை



போச்சம்பள்ளி :போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்துாரில், 100 ஆண்டு பழமையான திரவுபதியம்மன், தர்மராஜா கோவில் உள்ளது. இங்கு பண்ணந்துார், கொட்டாவூர், வேதகரம், கள்ளிப்பட்டி, மொள்ளம்பட்டி, சாமாண்டப்பட்டி, காராமூரை சேர்ந்தவர்கள் சேர்ந்து திருவிழாவில் இன்று, 28ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதாக, நோட்டீஸ் அச்சடித்து, ஊர் முழுக்க வினியோகம் செய்திருந்தனர்.

இதற்கு ஒரு தரப்பினர், எங்களையும் சேர்த்து திருவிழா நடத்த கேட்டபோது, 'திரவுபதியம்மன் திருவிழாவை காலம் காலமாக நாங்கள் மட்டும் தனியாக நடத்தி வருகிறோம்.
பட்டாளம்மன் திருவிழாவைத்தான் அனைத்து தரப்பினரும் சேர்ந்து செய்வது வழக்கம்' எனக்கூறி, திரவுபதியம்மன் திருவிழாவை நடத்தாமல் இருக்க, ஒரு தரப்பினர் முடிவு செய்தனர். இதனால், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா முன்னிலையில், தாசில்தார் அலுவலகத்தில், நேற்று முன்தினம் இருதரப்பினரும் அழைத்து, சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில், மற்றொரு தரப்பினரை கூட்டாக சேர்த்து திருவிழா நடத்த முடியாது. திருவிழாவை நடத்தாமல் புறக்கணிப்பதாக கூறி, ஒரு தரப்பினர் சென்றதால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இதனால் கோவில் பகுதியில் பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement