முதியோர் உதவித்தொகை வழங்குவதில் கையாடல் * விசாரணை நடப்பதாக அதிகாரி தகவல்

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடலாடி தாலுகாக்களில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் கையாடல் நடந்தது குறித்து விசாரணை நடக்கிறது என தனித்துணை கலெக்டர் கிருஷ்ணவேணி கூறினார்.

முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு நபர் ஒருவருக்கு ரூ.30 வீதம் வங்கிகளுக்கு கமிஷன் தொகையை அரசு வழங்கி வருகிறது. திருவாடானை, கடலாடி தாலுகாக்களில் இதை ஆய்வு செய்ததில் கடலாடியில் ரூ.60.97 லட்சம், திருவாடானை தாலுகாவில் ரூ.13 லட்சத்து 60 ஆயிரத்து 380 வரை கையாடல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் மூவரை நான்கு மாதங்களுக்கு முன் கைது செய்தனர். அதிகாரிகள் உடந்தையுடன் கையாடல் நடந்திருப்பதாகவும், வங்கி கமிஷன் தொகை மட்டுமின்றி ஏராளமானோருக்கு முதியோர் உதவித்தொகையே வழங்கப்படாததாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து திருவாடானையில் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணவேனி கூறியதாவது: முதியோர் உதவித் தொகையில் முறைகேடு நடந்திருப்பது குறித்து விசாரணை நடக்கிறது. விசாரணை அறிக்கை கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காப்பாற்றப்படுவதாக கூறுவது தவறு. விசாரணை அடிப்படையில் கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

Advertisement