சாலை தடுப்புகள் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்

ஊத்துக்கோட்டை:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம், கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி, தொம்பரம்பேடு, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட முக்கிய கிராமங்கள் மற்றும் இணைப்பு சாலை வழியே, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

பெரும்பாலான கிராமங்கள் வழியே செல்லும் இச்சாலையின் இரண்டு பக்கமும் வயல்வெளிகள் உள்ளன. சாலையின் ஒரு பகுதியில் இருந்து மறு பக்கத்திற்கு தண்ணீர் செல்ல, சாலையின் கீழே குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மேல் கல்வெட்டு அமைக்கப்படுகிறது.

இதனால் கல்வெட்டின் இரண்டு பக்கமும் அலுமினிய தடுப்புகள் வைக்கப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் இருந்து காக்கப்படுகின்றனர். ஊத்துக்கோட்டை தொம்பரம்பேடு கிராமத்தில் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்புகள் சேதம் அடைந்து சாய்ந்துள்ளன.

இதனால் இப்பகுதியில் தடுப்புகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, தொம்பரம்பேடு கிராமத்தில் சாலையில் வைத்துள்ள சேதம் அடைந்துள்ள தடுப்பை மாற்றி புதிய தடுப்புகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement