பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு: பஞ்சாப் அணியை வீழ்த்தியது

முல்லன்புர்: பிரிமியர் லீக் தொடரின் பைனலுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. தகுதிச் சுற்று-1ல், 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
பஞ்சாப், முல்லன்புரில் நடந்த பிரிமியர் லீக் 'பிளே-ஆப்' சுற்றுக்கான தகுதிச் சுற்று-1ல், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.


சுயாஷ் அசத்தல்: பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (7) ஏமாற்றினார். யாஷ் தயாள் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பிரப்சிம்ரன் சிங், புவனேஷ்வர் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். இவர், 18 ரன்னில் அவுட்டானார். ஹேசல்வுட் 'வேகத்தில்' கேப்டன் ஷ்ரேயஸ் (2), ஜோஷ் இங்லிஸ் (4) வெளியேறினர். நேஹல் வதேரா (8) நிலைக்கவில்லை. சுயாஷ் சர்மா 'சுழலில்' ஷசாங்க் சிங் (3), முஷீர் கான் (0) சிக்கினர். ஹேசல்வுட், குர்ணால் பாண்ட்யா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ஸ்டாய்னிஸ் (26), சுயாஷ் பந்தில் போல்டானார். ஹர்பிரீத் பிரார் (4) ஏமாற்றினார். அஸ்மதுல்லா ஓமர்சாய் (18) ஆறுதல் தந்தார். பஞ்சாப் அணி 14.1 ஓவரில் 101 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

சபாஷ் சால்ட்: சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு விராத் கோலி (12) சோபிக்கவில்லை. அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த பில் சால்ட், ஜேமீசன் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். முஷீர் கான் பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த மயங்க் அகர்வால் 19 ரன்னில் அவுட்டானார். அபாரமாக ஆடிய சால்ட், 23 பந்தில் அரைசதம் எட்டினார். முஷீர் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ரஜத் படிதர் வெற்றியை உறுதி செய்தார்.

பெங்களூரு அணி 10 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சால்ட் (56), படிதர் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.




நான்காவது முறை


பெங்களூரு அணி 4வது முறையாக பிரிமியர் தொடரின் பைனலுக்குள் நுழைந்தது. முன்னதாக விளையாடிய 3 பைனலிலும் (2009, 2011, 2016) தோல்வியடைந்து, 2வது இடம் பிடித்தது.




இன்னொரு வாய்ப்பு
தகுதிச் சுற்று-1ல் தோல்வியடைந்த பஞ்சாப் அணி, பைனலுக்கு தகுதி பெற இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கும் 'எலிமினேட்டர்' போட்டியில் (குஜராத்/மும்பை) வெற்றி பெறும் அணியுடன், தகுதிச் சுற்று-2ல் (ஜூன் 1) மோத வேண்டும். இதில் வென்றால் பஞ்சாப் அணி பைனலில் (ஜூன் 3) விளையாடலாம்.

24.1 ஓவர்
தகுதிச் சுற்று-1 போட்டி, வெறும் 24.1 ஓவரில் (பஞ்சாப் 14.1, பெங்களூரு 10 ஓவர்) முடிந்தது.

ஐந்தாவது வீரர்
பிரப்சிம்ரன் சிங், தனது முதல் ரன்னை எடுத்த போது பிரிமியர் லீக் அரங்கில் 500 ரன்னை எட்டிய 5வது பஞ்சாப் வீரர் ஆனார். ஏற்கனவே ஷான் மார்ஷ் (2008, 2011), மேக்ஸ்வெல் (2014), ராகுல் (2018-2021), ஷ்ரேயஸ் (2025, 516 ரன்) இம்மைல்கல்லை எட்டினர். தவிர, ஒரு சீசனில் பஞ்சாப் வீரர்கள் இருவர் தலா 500 ரன்களுக்கு மேல் குவித்தது முதன்முறையாக அரங்கேறியது. பிரப்சிம்ரன், 15 போட்டியில், 4 அரைசதம் உட்பட 517 ரன் குவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஸ்கோர்
தகுதிச் சுற்று-1ல் 101 ரன்னுக்கு சுருண்ட பஞ்சாப் அணி, பிரிமியர் லீக் 'பிளே-ஆப்' போட்டியில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 3வது இடத்தை லக்னோவுடன் (101 ரன், எதிர்: மும்பை, 2023, 'எலிமினேட்டர்') பகிர்ந்து கொண்டது. முதலிரண்டு இடத்தில் டெக்கான் அணி (82/10, எதிர்: பெங்களூரு, 2010, 3-4வது இடம் மற்றும் 87/10, எதிர்: ராஜஸ்தான், 2008, அரையிறுதி) உள்ளது.

Advertisement