ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 24 பதக்கம்

குமி: ஆசிய தடகளத்தில் இந்தியா, 24 பதக்கம் கைப்பற்றி அசத்தியது.
தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இந்தியா சார்பில் 58 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நடந்தது. இந்தியா சார்பில் சச்சின் யாதவ், யாஷ் விர் சிங் பைனலுக்கு முன்னேறினர். இதில் 25 வயது சச்சின் அதிகபட்சம் 85.16 மீ., துாரம் எறிந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். யாஷ் விர் சிங்கிற்கு (82.57) 5வது இடம் கிடைத்தது.
பாருல் 'வெள்ளி'
பெண்களுக்கான 5000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் பாருல் சவுத்ரி (15:15.33 நிமிடம்) வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஏற்கனவே இவர், 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்றிருந்தார்.
அபிநயா அபாரம்
பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்ட பைனல் நடந்தது. இந்தியா சார்பில் முதலில் ஸ்ரபானி, ஸ்நேகா ஓடினர். இந்தியா பின் தங்கி இருந்தது. மூன்றாவதாக 'பேடனை' பெற்ற தமிழகத்தின் அபிநயா, மின்னல் வேகத்தில் வந்தார். கடைசியாக வந்த நித்யா இரண்டாவது இடம் பிடித்தார். இதையடுத்து இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
அனிமேஷ் சாதனை
ஆண்களுக்கான 200 மீ., ஓட்ட பைனல் நடந்தது. இந்தியாவின் 21 வயது, அனிமேஷ் குஜுர், 20.32 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக சமீபத்தில் நடந்த தேசிய பெடரேஷன் தடகளத்தில் இவர், 20.40 விநாடி நேரத்தில் ஓடி இருந்தார்.
* பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா (2:01.89 நிமிடம்) வெண்கலம் வென்றார்.
* பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி (23.47) 5வது, நித்யா காந்தே (23.90) 7 வது இடம் பிடித்தனர்.
* ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் கிரிஷன் குமார் (1:48.72 வினாடி), அனு குமார் (1:58.04) கடைசி இரு இடம் (7, 8) பெற்றனர்.
நேற்றைய கடைசி நாளில் இந்தியா 3 வெள்ளி, 3 வெண்கலம் என 6 பதக்கம் வசப்படுத்தியது. மொத்தம் 24 பதக்கத்துடன் (8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம்), பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது.
வித்யா 'வெண்கலம்'
பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா (56.46 வினாடி) வெண்கலம் கைப்பற்றினார். 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற அணியில், தமிழகத்தின் அபிநயா இடம் பெற்றார். சுபா (2 தங்கம்), விஷால் (தங்கம், வெள்ளி), சந்தோஷ் (தங்கம்), பிரவீன் சித்ரவேல் (வெள்ளி), செர்வின் (வெண்கலம்) என தமிழகத்தின் 7 பேர் பதக்கம் கைப்பற்றினர்.
இரண்டாவது இடம்
ஆசிய தடகளத்தில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது.
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 19 9 4 32
இந்தியா 8 10 6 24
ஜப்பான் 5 11 12 28
* ஆசிய தடகளத்தில் 1973, 1975, 1985, 1989, 2000, 2007, 2025 என ஏழு முறை பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது.


மேலும்
-
உலகை ஆச்சர்யப்படுத்திய ஆபரேஷன் ஸ்பைடர்வெப்; உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா திணறல்!
-
கருணாநிதி பிறந்த நாளில் அவரது ஆணை நிறைவேறுமா ?
-
கொரோனா பாதிப்பு 4,000-ஐ நெருங்கியது; தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தலா ஒருவர் பலி
-
அண்ணா பல்கலை வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து
-
அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கூரை இடிந்தது; நோயாளிகள் தப்பினர்
-
நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை; அமெரிக்காவிடம் பகிர்ந்த சசி தரூர்!