செஸ்: முதலிடத்தில் ஹம்பி

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் பெண்கள் பிரிவில் ஹம்பி, முதலிடத்துக்கு முன்னேறினார்.
நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்கல்') தொடர் நடக்கிறது. பெண்கள் பிரிவு எட்டாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, ஸ்பெயின் சாராவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, போட்டியின் 58 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் வென்சுன் மோதினர். இப்போட்டி 'டிரா' ஆனது. பின் நடந்த 'டை பிரேக்கரில்' வைஷாலி, வெற்றி பெற்றார்.
8 சுற்று முடிவில் ஹம்பி (13.5) முதலிடத்துக்கு முன்னேறினார். சீனாவின் வென்சுன் (12.5), உக்ரைனின் அனா முஜிசக் (12.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். வைஷாலி (9.5) 5வது இடத்தில் தொடர்கிறார்.
அர்ஜுன் வெற்றி
ஆண்கள் பிரிவு 8வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அமெரிக்காவின் பேபியானோ காருணாவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், போட்டியின் 71 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். நடப்பு உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் நகமுராவுடன் தோல்வியடைந்தார்.
8 சுற்று முடிவில் காருணா (12.5), நார்வேயின் கார்ல்சன் (12.0), நகமுரா (11.5), குகேஷ் (11.5), அர்ஜுன் (10.5) 'டாப்-5' இடத்தில் உள்ளனர்.

Advertisement