சூரியசக்தி மின் நிலையம் அமைக்க தரிசு நிலம் தேடும் மின் வாரியம்

சென்னை:தமிழகத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின், 'பி.எம்., - குசும்' எனப்படும், 'பிரதம மந்திரி கிசான் உர்ஜ் சுரக் ஷா ஏவம் உத்தான் மஹாபியான்' திட்டத்தின் கீழ், விவசாயிகள் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது.
இதன் வாயிலாக மழை இல்லாமல் சாகுபடி பாதிக்கப்பட்டாலும், சூரியசக்தி மின்சாரம் விற்பனை வாயிலாக விவசாயிகள் வருவாய் ஈட்டலாம்.
பி.எம்., - குசும் திட்டத்தின் பிரிவு, 'ஏ' மற்றும், 'சி'யின் கீழ், தமிழகத்தில், 11 கிலோ வோல்ட் மற்றும், 22 கி.வோ., மின் வழித்தடங்களை உடைய துணை மின் நிலையங்களில் இருந்து, 5 கி.மீ., சுற்றளவில் உள்ள தரிசு மற்றும் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு மின் நிலையம், ஒரு மெகா வாட் முதல், நான்கு மெகா வாட் திறனில் அமைக்கப்படும். இதற்காக, நிலத்தை குத்தகைக்கு வழங்க விருப்பம் உள்ளவர்களுக்கு, மின் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 3 ஏக்கர் நிலம் தேவை. எனவே, ஒரு மெகா வாட் முதல் நான்கு மெகா வாட் வரை மின் நிலையம் அமைக்க, தரிசு நிலம், சாகுபடி செய்ய முடியாத நிலங்களை குத்தகைக்கு வழங்கலாம்.
அந்த இடத்தில் தகுதியான ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்து, சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படும்.
அந்த நிறுவனம், நிலத்தின் உரிமையாளருக்கு ஆண்டுதோறும் குத்தகை தொகை வழங்க வேண்டும்.
நிலத்தின் உரிமையாளரே மின் நிலையம் அமைக்க விரும்பினாலும் அனுமதி தரப்படும். இந்த மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, ஒரு யூனிட், 3.28 ரூபாய்க்கு வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது, நிலம் கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அந்த இடத்தில் மின் நிலையம் அமைக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்தாண்டுக்குள் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால், விவசாயிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் கிடைக்கும். மின் வாரியத்திற்கும் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்