பைனலில் ஸ்பெயின்-போர்ச்சுகல் * வெளியேறியது பிரான்ஸ் அணி

ஸ்டட்கர்ட்: ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் தொடரின் அரையிறுதியில் ஸ்பெயின், 5-4 என பிரான்சை வீழ்த்தியது.
ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக 'நேஷன்ஸ் லீக்' தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில் போர்ச்சுகல், ஜெர்மனியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதியில் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் மோதின. ஸ்பெயின் அணிக்கு வில்லியம்ஸ் (22), மெரினோ (25) தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் 54வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் யமால், 'பெனால்டி' வாய்ப்பில் கோல் அடித்தார். பெட்ரி (55) மற்றொரு கோல் அடித்தார். மறுபக்கம் எம்பாப்வே (59), தன் பங்கிற்கு 'பெனால்டி' வாய்ப்பில் கோல் அடித்தார். 67 வது நிமிடம் யமால் மற்றொரு கோல் அடிக்க, 5-2 என முந்தியது ஸ்பெயின்.
ஸ்பெயினின் விவியன் (84) 'சேம்சைடு' கோல் அடித்தார். தொடர்ந்து பிரான்சின் முவானி (90+3) கோல் அடித்த போதும், ஸ்பெயின் அணி 5-4 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. நாளை இதில், போர்ச்சுகலை சந்திக்க உள்ளது.

Advertisement