இந்தியா 'ஏ' அணி தடுமாற்றம்

நார்தாம்ப்டன்: இரண்டாவது டெஸ்டில் இந்தியா 'ஏ' அணி பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறினர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் (4 நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. நார்தாம்ப்டனில், 2வது டெஸ்ட் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 319/7 ரன் எடுத்திருந்தது. தனுஷ் (5), அன்ஷுல் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோஷ் டங் 'வேகத்தில்' தனுஷ் (15), அன்ஷுல் கம்போஜ் (2) வெளியேறினர். துஷார் தேஷ்பாண்டே (11) 'ரன்-அவுட்' ஆனார். இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 348 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கலீல் அகமது (7) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் வோக்ஸ் 3, டங், ஹில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு பென் மெக்கின்னி, டாம் ஹைன்ஸ் ஜோடி துவக்கம் தந்தது. அன்ஷுல் கம்போஜ் 'வேகத்தில்' மெக்கின்னி (12) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய ஹைன்ஸ் அரைசதம் கடந்தார். துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஹைன்ஸ் (54) அவுட்டானார். தனுஷ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய எமிலியோ, அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்த போது தனுஷ் பந்தில் எமிலியோ (71) அவுட்டானார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 192 ரன் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மையால் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோர்டான் காக்ஸ் (31) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா 'ஏ' சார்பில் கம்போஜ், தேஷ்பாண்டே, தனுஷ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



லண்டனில் இந்திய அணி


இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக பயிற்சியாளர் காம்பிர், புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், ரவிந்திர ஜடேஜா, தமிழகத்தின் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ரிஷாப் பன்ட், பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் உள்ளிட்ட இந்திய அணியினர் நேற்று மும்பையில் இருந்து லண்டன் சென்றனர்.

Advertisement