திண்டுக்கல் 'திரில்' வெற்றி: சேலம் அணி ஏமாற்றம்


நெல்லை: கடைசி ஓவரில் அசத்திய திண்டுக்கல் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. சேலம் அணி ஏமாற்றியது.

நெல்லையில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலம், 'நடப்பு சாம்பியன்' திண்டுக்கல் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

சேலம் அணிக்கு ஹரி நிஷாந்த் (10), கேப்டன் அபிஷேக் (15) சோபிக்கவில்லை. சன்னி சாந்து (25), ராஜேந்திரன் விவேக் (35) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய நிதிஷ் ராஜகோபால் (74) அரைசதம் விளாசினார். சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்தது. திண்டுக்கல் சார்பில் அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தார்.

திரில் வெற்றி: சவாலான இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஷ்வின் (36), ஷிவம் சிங் (34) நல்ல துவக்கம் தந்தனர். ஜெயந்த் (25), ஹன்னி சைனி (35), விமல் குமார் (24) நம்பிக்கை தந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டன. பொய்யாமொழி பந்துவீசினார். முதல் 4 பந்தில், 4 ரன் கிடைத்தது. ஐந்தாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய வருண் சக்ரவர்த்தி, கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார்.
திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 192 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வருண் (13), சந்திரசேகர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement