அ.தி.மு.க., விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை: அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையத்திடம், சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு உள்ளிட்ட, அக்கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக்கூடாது; உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. அவற்றை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழ், உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு அதிகார வரம்பு உள்ளதா' என, கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தும்படி, ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்து, ஏழு வாரங்கள் கடந்த பின்னும், அதிகார வரம்பு குறித்து, இதுவரை தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே, ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க, பழனிசாமி தரப்பில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம், 'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தில் கேட்டு பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை, ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு