பள்ளி சமையலறையில் காஸ் சிலிண்டர் வெடிப்பு

வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டம், பாலப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியின் சமையல் கூடத்தில், காலை சிற்றுண்டி சமைத்த போது, காஸ் சிலிண்டர் வெடித்து கட்டடம் சேதம் அடைந்தது. அப்போது, பணியாற்றிய சமையலர்கள் வெளியே ஓடியதால் உயிர் தப்பினர்.

பாலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க, காலை 8:00 மணிக்கு சமையலர் லட்சுமி, கங்கா தேவி சமையல் செய்தனர்.

அப்போது காஸ் தீர, புதிய சிலிண்டரை எடுத்து, ரெகுலேட்டரை மாட்டி அடுப்பை பற்ற வைக்கும் போது தீப்பற்றியது.

அதை அறிந்ததும் சமையலர் இருவரும் வெளியே ஓடி உயிர் தப்பினர். சில வினாடிகளில், பயங்கர சத்தத்துடன் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. உள்ளிருந்த பொருட்களுடன் கட்டடமும் சேதமாகின.

வேடசந்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். இதை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

Advertisement