'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி:'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம், பிரேசிலுக்கு செல்கிறார். இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்க மாட்டார்கள் என, தகவல் வெளியாகி உள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, பிரிக்ஸ் எனப்படுகிறது.
ஐந்து நாடுகள்
இந்த அமைப்பில் மேலும் ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு தற்போது, 10 நாடுகள் உள்ளன.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில், ஜூலை 6 - 7ல், 17வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்கிறது.
இதில் பங்கேற்க பிரதமர் மோடி அடுத்த வாரம், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
எனினும் இந்த உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என, கூறப்படுகிறது. புடினுக்கு பதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜின்பிங்குக்கு மாற்றாக, சீன பிரதமர் பிரதமர் லி கியாங் பங்கேற்பர் என, சொல்லப்படுகிறது.
காரணம் என்ன?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரன்ட் காரணமாக, பிரேசில் பயணத்தை ரஷ்ய அதிபர் புடின் தவிர்க்கிறார்.
அபாயம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையெழுத்திட்ட நாடாக பிரேசில் இருப்பதால், அந்நாட்டுக்கு வந்தால் புடின் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.
சீன அதிபர் ஷீ ஜின்பிங் முதன்முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தவறவிடுவார்; அதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
முதல் பயணமாக, தலைநகர் டில்லியில் இருந்து மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவுக்கு ஜூலை 2ல் பிரதமர் மோடி செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின், இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. தொடர்ந்து, ஜூலை 3 - 4 வரை டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார். அங்கு பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த பயணத்தை முடித்து, அர்ஜென்டினாவுக்கு ஜூலை 4- - 5 வரை அவர் செல்கிறார். இதையடுத்து, 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்க, ஜூலை 5- - 8 வரை பிரேசிலுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்வார். இறுதிக்கட்டமாக, ஜூலை 9ல், நமீபியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அதை முடித்து, தாயகம் திரும்புகிறார்.
