விண்வெளி நாயகன் சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள நம் நாட்டு வீரர் சுபான்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'டிராகன்' விண்கலம் வாயிலாக, 'ஆக்சியம் மிஷன் 4' திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சமீபத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.

அங்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள நம் வீரர் சுபான்ஷு சுக்லா உடன், 'வெப்கேஸ்ட்' நேரலை வாயிலாக பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.

பிரதமர் மோடி கூறுகையில், ''தற்போது நீங்கள் தாய் மண்ணில் இருந்து வெகு துாரத்தில் உள்ளீர்கள். ஆனால், இந்தியர்களின் மனதில் நெருக்கமாக உள்ளீர்கள்.

''உங்கள் பெயரில் சுபம் உள்ளது. இந்த பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம். விண்வெளியில் நம் தேசியக் கொடியை ஏந்தியதற்காக வாழ்த்துகள். வரலாற்று சிறப்புமிக்க இந்த பயணம், விண்வெளி தேடலுக்கான நம் மாணவர்களின் உறுதியை வலுப்படுத்தும்,'' என்றார்.

இதன் பின், சுபான்ஷு சுக்லா பேசுகையில், ''வாழ்த்திய உங்களுக்கும், 140 கோடி இந்தியர்களுக்கும் நன்றி. விண்வெளியில் இருந்து பார்க்கும் போது, வரைபடத்தை விட இந்தியா பிரமாண்டமாகவும், பெரிதாகவும் தெரிகிறது. இங்கு நான் நலமுடன் உள்ளேன். இந்த பயணம் ஒட்டுமொத்த நாட்டுக்கானது,'' என்றார்.

Advertisement