அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் துப்பாக்கிச்சூடு: குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம் வலியுறுத்தல்

3

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.



அமெரிக்காவின் உதா மாகாணத்தில் உள்ள ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இஸ்கான் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த கோவிலில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.


20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்கள் மீது பாய்ந்துள்ளன. இது குறித்து, புகைப்படங்களையும் கோவில் நிர்வாகம் இணையதளத்தில் பகிர்ந்து தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது. இந்து கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது.


இது குறித்து, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இஸ்கான் ஸ்ரீராதா கிருஷ்ணா கோவிலில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அனைத்து பக்தர்களுக்கும் சமூகத்திற்கும் தூதரகம் முழு ஆதரவை வழங்குவதோடு, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement