மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி திட்டமிட்டபடி முடிக்கப்படுமா?

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்புக்கு எதிர்பார்த்த அளவில் கற்கள் கிடைத்தாலும் அதை வடிவமைக்கும்போது விரிசல் ஏற்படுவதால் திட்டமிட்டபடி ஓராண்டிற்குள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.


இக்கோயிலில் 2018 பிப்.2ல் இரவு கடை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.



இதில் சுவாமி சன்னதியில் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சேதமடைந்தது. இதைதொடர்ந்து கோயில் கடைகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி நிரந்தரமாக அகற்றப்பட்டன. இம்மண்டபத்தை சீரமைக்க 2018 முதலே திட்டமிட்டப்பட்டது கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகள் தாமதமானது.


இடைப்பட்ட காலத்தில் நாமக்கல் மாவட்டம் பட்டணம் கல்குவாரியில் இருந்து கற்கள் எடுக்க அரசு அனுமதி அளித்தது. நீண்ட இழுபறிக்கு பின் கடந்தாண்டு குவாரியில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு மதுரை கூடல் செங்குளம் பண்ணையில் கல் துாண்கள், பீடம், சிம்ம பீடம், உத்தரம், கோயில் இதர அழகியல் வேலைப்பாடுகளுடன் கற்களை செதுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அரசு ரூ.18.10 கோடி ஒதுக்கியுள்ளது.


கடந்தாண்டு மார்ச் 27ல் வீரவசந்தராயர் மண்டபத்தில் 3 கல் துாண்கள் பொருத்தும் பணி துவங்கியது. அடுத்த தடையாக கற்களை எடுத்து வரும் உரிமம் முடிந்து அதை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது.


பின்னர் உரிமம் புதுப்பிக்கப்பட்டு கற்கள் எடுத்து வந்து வடிவமைக்கும் நடந்து வருகிறது. மண்டபம் உத்திரம் போன்றவற்றிக்கு நீளமான, அகலமான ஒரே கல் இருந்தால்தான் கூரை வலுவாக இருக்கும் என்பதால் அதற்கேற்ப கற்களை தேர்வு செய்து வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.


ஆனால் அப்படி வடிவமைக்கும்போது கற்களில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் திட்டமிட்டு எடுத்துவரப்படும் கற்கள் பல பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.


இதனால் திட்டமிட்டபடி ஓராண்டிற்குள் பணிகள் முடிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. கோயில் தரப்பில் கேட்டபோது 'கும்பாபிஷேகத்திற்குள் முடிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.


நேற்றுமுன்தினம் நடந்த அறங்காவலர்கள் குழுக்கூட்டத்தில், சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.



கற்கள் வடிவமைக்கும் போது விரிசல் ஏற்படுவதும், உடைவதும் சகஜம்தான். அதனால் வடிவமைக்கும் பணி எந்த வகையிலும் பாதிக்காது' என்றனர்.

Advertisement