சிந்தனைக்களம்: வளைகுடாவில் அடுத்தது என்ன?

2


நீண்ட காலமாக செய்ய விரும்பியதை இறுதியாக இஸ்ரேல் இப்போது சாதித்துள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட குண்டு மழையால், மேற்காசியாவிற்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானை, அமெரிக்காவும் - இஸ்ரேலும் திறம்பட அகற்றியுள்ளன. அதேசமயம் லெபனானில் ஹெஸ்பொல்லா மற்றும் காசாவில் ஹமாஸ் போன்ற ஈரானிய ஆதரவு பயங்கரவாதிகளையும் இரு நாடுகளும் சேர்ந்து அழித்துள்ளன. ஈரானிய ஆதரவாளரான, ஸிரிய நாட்டு அதிபர் பஷர் அல் ஆசாதை வீழ்த்த விரிக்கப்பட்ட வலையாகவும் இது பார்க்கப்படுகிறது.


மேற்காசியாவின் ஒரே ஆதிக்க அணுசக்தி நாடாக இஸ்ரேல் இப்போது உள்ளது. போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்கள் என, 40,000 அமெரிக்க துருப்புகள் அந்த மண்ணில் நிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கு, இனி ராணுவ சவால்களே இல்லை என்பது அமெரிக்காவின் துருப்புகள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


அணுசக்தி இல்லாத வளைகுடா நாடுகள், இனி இந்த சங்கடமான யதார்த்தத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வரலாற்று போட்டி



ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் இந்த மோதலில், மேற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து நாடுகளும், இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு அமைதியாக உடன்பட்டுள்ளன. இதில், ஐரோப்பியா, வளைகுடா நாடுகள், சீனா அல்லது ரஷ்யாவும் விதிவிலக்கல்ல.



இந்த பிராந்தியத்தில், ஈரானின் ராணுவ திறனும், அந்நாட்டின் அரசியல் சிந்தாந்தமும் இந்த நாடுகளுக்கு முக்கிய அச்சுறுத்தலாக இருந்துள்ளன. ஈரானுடன் வரலாற்று போட்டியைக் கொண்டிருந்த வளைகுடா நாடுகளுக்கு, அந்நாட்டிற்கு எதிரான தங்கள் பாதிப்பை சமநிலைப்படுத்த, இஸ்ரேலும் - அமெரிக்காவும் தேவைப்பட்டன.


அமெரிக்க குண்டுவீச்சுக்குப் பின், 10,000 பணியாளர்களைக் கொண்ட மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க தளமான கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைத் திருப்பித் தாக்குவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியில்லை. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தையும், ஈரான் குறிவைத்தது.

சீரழிவை நிறுத்துதல்



ஈரானின் தலைமையைப் பொறுத்தவரை, இது அதன் இருப்பை தக்கவைத்து கொள்வதற்கான நெருக்கடி. அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் தலைமையைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியாக உயிர்வாழ வேண்டுமானால், சரணடைவது அல்லது இந்தத் தாக்குதல்களை எதிர்கொண்டு அமைதியாக இருப்பது அவர்களின் தேர்வாக இருக்கவில்லை.



ஆட்சி மாற்றம்தான் இறுதி ஆட்டம் என்பதை அவர்கள் அறிவர். அந்த அளவுக்கு, இஸ்ரேலுக்கும் - அமெரிக்காவிற்கும், ஈரானுடனான போர் இன்னும் முடிவடையவில்லை.


ஆனால், அமெரிக்காவால் லிபியா மற்றும் ஈராக்கில் ஏற்பட்ட வன்முறை மற்றும் ஆட்சி மாற்றம் அந்த நாடுகளை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி, முழு பிராந்தியத்தையும் பாதித்துள்ளது. இதில், ஐ.எஸ்.ஐ.எஸ்., மற்றும் அல் குவைதா பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதும் அடங்கும்.


இதன் விளைவாக, வளைகுடா நாடுகள் தங்கள் சொந்த நலனுக்காக செயலற்ற பார்வையாளர்களாக இருப்பதை நிறுத்திவிட்டு, பிராந்தியத்தில் மேலும் மோதலைத் தடுக்கும் செயலில் ஈடுபட வேண்டும். சுவாரஸ்யமாக, ஈரான் மேலும் சீரழிவதைத் தடுப்பது அவர்களின் சொந்த நலனுக்காக இருக்கலாம்.


போர்நிறுத்த அழைப்பு என்பது, புதைகுழியில் இருந்து வெளியேறும் வழியை ஈரானுக்கு வழங்கியது. மேற்கத்திய ஊடகங்கள் அலட்சியப்படுத்தினாலும், இஸ்ரேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.


இதை தொடர்ந்து, கவனம் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மாறியுள்ளது. சர்வதேச அணுசக்தி அமைப்பை மீறி ஈரான் செயல்படுவது புத்திசாலித்தனமற்றது.


ஈரானின் அணுசக்தி திட்டத்தை அகற்றுவது என்ற இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் கனவு, அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியுடன் நனவாகியுள்ளது.


இதனால், அவரின் உள்நாட்டு அரசியல் செல்வாக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. ஜோர்டான் நதியிலிருந்து மத்திய தரைக்கடல் வரையிலான, 'வாக்குறுதியளிக்கப்பட்ட நிலப்பரப்பு' என்ற கனவை நனவாக்க, அவர் இப்போது காசா மற்றும் மேற்குக் கரையை விரைவில் இணைக்க முயற்சிப்பார்.

'ஆப்பரேஷன் சிந்----------------துார்'



தற்போது நெதன்யாகுவும், அதிபர் டிரம்பை முழுமையாக தன் பக்கம் வைத்துள்ளார். காசா மற்றும் மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை, இணைப்பதை அல்லது பராமரிப்பது கூட பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கு உகந்ததல்ல என்பதை வளைகுடா நாடுகளும், பிராந்தியத்தில் உள்ள முக்கிய பங்குதாரர்களும் உணர வேண்டும்.



காசாவில் 56,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதன் வாயிலாக, பாலஸ்தீன பிரச்னைக்கு ஒரு தீர்வு தேவை. போரால் பாதிக்கப்பட்ட மற்ற அனைவரும் இடம்பெயர்ந்து, தினசரி அச்சுறுத்தல்கள், பட்டினி போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் மேற்குக் கரையில் உள்ளவர்கள், யூத குடியேறிகளுக்கு இடமளிக்க தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்படுகின்றனர்.

'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது இந்தியாவுக்கு ஆதரவாக நின்ற சில நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும்.



இருப்பினும், சாபஹார் துறைமுக இணைப்பு உட்பட ஈரானுடனான கூட்டு முயற்சிகள் இந்தியாவிற்கு முக்கியமானவை. வளைகுடா பிராந்தியத்திலும் இந்தியாவின் பங்குகள் அதிகம். இதன் விளைவாக, நம் நலன்களைப் பாதுகாக்க இந்தியா இப்பகுதியில் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டிய நேரம் இது.


டி.எஸ்.திருமூர்த்தி, ஐ.எப்.எஸ்., - ஓய்வு

Advertisement