எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

45

சென்னை: ''எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். என்னுடைய பணி மக்கள் பணி அதை அறிந்து நான் செயல்படுவேன்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னையில், அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் 2,376 திருமணங்கள் நடைபெற்றுள்ளது; அதில் 150 திருமணங்கள் நானே நடத்தி வைத்துள்ளேன். 3,127 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளோம். தி.மு.க., ஆட்சியில் 12 ஆயிரம் கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களைப் புனரமைக்க ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 7,000 ஏக்கருக்கு மேற்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன; பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறோம். எல்லாரும் எல்லாம் என்ற மனம் கொண்டு தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது.


பாராட்டுகின்றனர்




அறநிலையத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,326 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. வெறுப்பையும் சமூகத்தில் பிளவுபடுத்தும் எண்ணங்களை கொண்டவர்களால் எங்களை பார்த்து தாங்கிக் கொள்ள முடியவில்லை. பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசை பாராட்டுகின்றனர்.

கேலி செய்யுங்கள்




எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். என்னுடைய பணி மக்கள் பணி அதை அறிந்து நான் செயல்படுவேன். இன்னும் எங்களை கேலி செய்யுங்கள், விமர்சனம் செய்யுங்கள், கொச்சைப்படுத்துங்கள், அதை பற்றி கவலைப்பட போவதில்லை. மணமக்கள் பிறக்க போகும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement