கிரானைட் வழக்கில் சென்னையில் சகாயம் ஆஜராக உத்தரவு

1

மதுரை : மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிரானைட் குவாரி விதிமீறல் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட முன்னாள் கலெக்டர் சகாயம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இருந்தவாறு காணொலியில் ஆஜராக மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விக்கிரமங்கலத்தில் ஒரு கிரானைட் குவாரி விதிமீறல் தொடர்பாக 2013 ல் வழக்கு பதியப்பட்டது. கனிமவள குற்ற வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அப்போதைய கலெக்டர் சகாயம் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். அவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். சகாயம் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அவர்,'கிரானைட் குவாரி விதிமீறலில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், எனக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. எனக்கு அச்சுறுத்தல் உள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை. நிரந்தர பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்,' என அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பினார்.

நேற்று நீதிபதி ரோகிணி விசாரித்தார்.

சகாயம் ஆஜராகவில்லை. அரசு வழக்கறிஞர் சிவகுமார் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஆஜராக இயலவில்லை என சகாயம் கடிதம் அளித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். சகாயம் காணொலி மூலம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இருந்தவாறு ஜூலை 21 ல் இந்நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் சாட்சியமளிக்க சம்மன் அனுப்பப்படும். அந்நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement