அமைச்சர் ஒன்று சொல்கிறார்; இயக்குநர் ஒன்று செய்கிறார்; பணிநிரவல் உத்தரவால் போராட்டம் நடத்தும் முடிவில் சங்கங்கள்

மதுரை : தொடக்க கல்வித்துறையில் 'பதவி உயர்வுக்கு முன் பணிநிரவல் நடக்காது' என கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்த சில நாட்களில், பணிநிரவல் நடக்கும் என இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று (ஜூலை 3) பணி நிரவல் கலந்தாய்வு துவங்கவுள்ள நிலையில், கலந்தாய்வு மையங்களுக்கு முன் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
பள்ளி கல்வியில் பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்கியுள்ள நிலையில், தொடக்க கல்வியில் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு டி.இ.டி., தேவையா என்பது குறித்த வழக்குகள் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவுற்று தீர்ப்பு அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதனால் மாநில அளவில் 3500க்கும் மேற்பட்டோருக்கு தொடக்க, நடுநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க முடியாமல் இழுபறியாக உள்ளது. அதேநேரம் இத்துறையில் 3500க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்களும் உள்ளன.
உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பின் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தினால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பின் பணிநிரவல், மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன் திருச்சியில் நடந்த ஒரு ஆசிரியர் சங்க முப்பெரும் விழாவில் அமைச்சர் மகேஷ் பேசுகையில், 'பதவி உயர்வுக்கு முன் கண்டிப்பாக பணிநிரவல் இருக்காது' என உறுதியளித்தார்.
ஆனால் தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் பிறப்பித்த உத்தரவில், பதவி உயர்வு குறித்து எதுவும் குறிப்பிடாமல் இன்று (ஜூலை 3) இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) நடக்கும். அதை தொடர்ந்து மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் என அடுத்தடுத்து ஜூலை 30 வரை கலந்தாய்வு நடக்கும் என ஜூலை 1ல் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பதவி உயர்வு அளிக்காமல் கலந்தாய்வு நடத்தி, கடைசியில் பதவி உயர்வு அளிக்கும் பட்சத்தில் பதவி உயர்வில் செல்லுவோரின் 3500 பணியிடங்கள் காலியாகுமே அந்த இடங்களில் 'நிர்வாக காரணம்' என்ற பெயரில் மீண்டும் பேரம் மூலம் நிரப்ப திட்டமா என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அகில இந்திய தொடக்க பள்ளிகள் கூட்டமைப்பு (ஐபெட்டா) அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறியதாவது:
மாநில அளவில் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நுாற்றுக்கும் மேல் உள்ளன.
இதனால் பணிநிரவலை இந்தாண்டு நிறுத்தி வைக்கிறேன்' என அமைச்சர் மகேஷ் திருச்சியில் தெரிவித்தார். ஆசிரியர்களிடையே அவரது அறிவிப்பு வரவேற்பை பெற்றது. ஆனால் இயக்குநர் பணிநிரவலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இது ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கை. இத்துறையில் அமைச்சர் சொல்வது ஒன்றாக உள்ளது. இயக்குநர் செய்வது ஒன்றாக உள்ளது. ஏன் இந்த குளறுபடி. பதவி உயர்வுக்கு முன் பணிநிரவல் நடந்தால் அனைத்து மையங்களுக்கும் முன் தமிழக ஆசிரியர் கூட்டணி, பிற சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவில் உள்ளோம் என்றார்.
மேலும்
-
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது: கானா பார்லி.,யில் பிரதமர் மோடி பெருமிதம்
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாக்., அணிக்கு மத்திய அரசு அனுமதி
-
மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்: பாதுகாப்பு தர திருமாவளவன் வலியுறுத்தல்
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 82 பேர் பலி
-
ஹேக் ஆனது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக வலைதளம்
-
கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி: திருமணமாகி 2 வாரத்தில் சோகம்!