பேரூராட்சிகளுக்கு தடையில்லா குடிநீர் வினியோகம் துவக்கம்

கூடலுார்: கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளுக்கு தடையில்லா குடிநீர் சப்ளைக்கு ரூ.19.98 கோடியிலான திட்டப் பணிகள் முடிந்து எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முல்லைப் பெரியாற்றிலிருந்து பம்பிங் செய்து கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. லோயர்கேம்பில் இருந்து இப்பேரூராட்சிகள் வரை பதிக்கப்பட்டிருந்த பகிர்மான குழாய் அடிக்கடி உடைந்து குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மோட்டார் அடிக்கடி பழுது ஏற்பட்டதால் குடிநீர் வினியோகமும் பாதித்தது.

இதனைத் தொடர்ந்து பகிர்மானக் குழாயை மாற்றி அமைக்கவும், பம்பிங் ஸ்டேஷனில் கூடுதல் குதிரை திறன் கொண்ட மோட்டார் பொருத்த எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் அரசுக்கு பரிந்துரைத்தார். அதனடிப்படையில் ரூ.19.98 கோடி ஒதுக்கீடு செய்து இதற்கான பணிகள் நிறைவடைந்தது. இதனை எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என எம்.எல்.ஏ., தெரிவித்தார். பேரூராட்சி தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement