நடிகர் - நடிகையருக்கு 'கோகைன்' விற்றோம்: கடத்தல் புள்ளி கெவின் வாக்குமூலத்தால் சிக்கப்போவது யார்?

3


சென்னை: 'நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா வாயிலாக, நடிகர் - நடிகையருக்கு கோகைன் சப்ளை செய்தோம்' என, கெவின் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோகைன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி பிரசாத், 33; சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப்குமார், 38; கானா நாட்டைச் சேர்ந்த ஜான், 38, மற்றும் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கெவின், 35, ஆகியோரை, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.



இவர்களுடன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், 46, மற்றும் கிருஷ்ணா, 47, ஆகியோரும் கைதாகி உள்ளனர்.அவர்களில், பிரசாத், பிரதீப்குமார், ஜான் மற்றும் கெவின் ஆகியோரை ஆறு நாட்கள் காவலில் எடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரிடம் கெவின் அளித்துள்ள வாக்குமூலம்:

கானா நாட்டைச் சேர்ந்த ஜான் தான், எங்களுக்கு கோகைன் சப்ளை செய்து வந்தார். அவரின் தலைமையில் செயல்படும் கும்பலில் முக்கிய பங்கு வகித்து வந்தேன். பெங்களூரில் தங்கியிருந்த பிரதீப்குமார் தான், ஜானின் வலது கரமாக செயல்பட்டு வந்தார். கோகைன் எவ்வளவு தேவை என்பதை, ஏழு நாட்களுக்கு முன்னதாகவே பிரதீப்குமாரிடம் தெரிவித்து விட வேண்டும். அவர், பிரசாத் வாயிலாக எங்களுக்கு கோகைன் அனுப்பி வைப்பார்.



பிரதீப்குமாரின் நம்பிக்கைக்கு உரிய நபராக பிரசாத் செயல்பட்டு வந்தார். பிரசாத்துடன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை அடிக்கடி சந்தித்து உள்ளோம். எங்களிடம் 1 கிராம் கோகைன், 7,000 ரூபாய்க்கு வாங்கி, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரிடம், 12,000 - 15,000 ரூபாய்க்கு பிரசாத் விற்பார். ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வாயிலாக நடிகர் - நடிகையருக்கு நானும் நேரடியாக கோகைன் விற்றுள்ளேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனுக்கள் தள்ளுபடி


போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், கடந்த 23ல் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தரப்பில் ஜாமின் கோரி, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில், 'மனுதாரர் மீது போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை. போலீசார் குற்றம் சாட்டுவது போன்று, எந்த குற்றத்தையும் செய்யவில்லை. மனுதாரரை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு, எந்த ஆதாரங்களும் இல்லை.


'கைது செய்து 4 மணி நேரத்துக்கு பிறகு, மனுதாரருக்கு சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவருக்கு போலீசாரால், உணவு, தண்ணீர், காபி மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. இது, இடைவிடாத வாந்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அவர் மயக்கம் அடைந்துள்ளார்.



அதன்பின், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரரை வழக்கில் சிக்க வைக்க, ஏதேனும் சந்தேகப்படும்படியான பொருள் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. மனுதாரரை கைது செய்தபோது, அவரிடம் இருந்து போதைப்பொருள் எதையும் கைப்பற்றவில்லை. எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.


இதேபோல, இந்த வழக்கில் கடந்த 26ல் கைது செய்யப்பட்ட, நடிகர் கிருஷ்ணாவும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹெர்மிஸ் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement