தலாய்லாமா வாரிசு நியமனம்: கிரண் ரிஜிஜூ கருத்துக்கு சீனா எதிர்ப்பு

1


பீஜிங்: தலாய் லாமாவின் வாரிசு நியமனம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்த கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எங்கள் நாட்டு உள் விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனக்கூறியுள்ளது. சீனாவின் கருத்து தொடர்பாக கிரண் ரிஜிஜூ விளக்கமளித்துள்ளார்.



வாரிசு





சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஆன்மிக தலைவரான தலாய் லாமா, அங்கிருந்து வெளியேறி நம் நாட்டில் வாழ்ந்து வருகிறார். வரும் 6ம் தேதி 90 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில், தன் மறைவுக்குப் பின்னரும், 500 ஆண்டுகள் பழமையான அறக்கட்டளை தொடரும் எனவும், தன் மறுபிறவி என்று சொல்லப்படும் 15வது தலாய் லாமாவை தேர்வு செய்யும் அதிகாரம், போட்ராங் அறக்கட்டளைக்கு உள்ளதாகவும் அறிவித்து இருந்தார். ஆனால், தங்கள் அங்கீகாரம் இல்லாமல் தலாய் லாமாவை தேர்வு செய்ய முடியாது என சீனா கூறியுள்ளது.

தலாய் லாமாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க தர்மசாலா சென்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிருபர்களிடம் கூறுகையில், ' திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுதும் வாழும் ஆதரவாளர்களுக்கும் தலாய் லாமாவின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. அவரது வாரிசை தீர்மானிக்கும் உரிமை, தலாய்லாமாவுக்கே உள்ளது. இதில் வேறு யாரும் தலையிட முடியாது,' எனத் தெரிவித்து இருந்தார்.

முன்னேற்றம்



இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது: இந்தியா தனது வார்த்தைகளிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். திபெத் தொடர்பான விஷயங்கள் உள்ளிட்ட சீனாவின் உள்நாட்டு பிரச்னையில் தலையிடுவதை நிறுத்துவதுடன், இந்தியா - சீனா இடையிலான உறவில் ஏற்படும் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதை நிறுத்த வேண்டும். தலாய் லாமாவின் சீன எதிர்ப்பு கொள்கை குறித்து இந்தியா தெளிவுபடுத்துவதுடன், திபெத் தொடர்பான பிரச்னைகளில் தனது உறுதிமொழியை இந்தியா மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதிநிதி அல்ல



இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது சீனாவின் கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. நான் தலாய்லாமாவின் பக்தன். தனது வாரிசை தலாய் லாமாவே தேர்வு செய்வார் என அவரை பின்பற்றும் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இந்திய அரசு சார்பாகவோ அல்லது சீன அரசின் பிரதிநிதியாகவோ நான் எதையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


உறுதிப்பாடு




இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலாய் லாமா தொடர்பாகவும், அவரது அறக்கட்டளை தொடர்பாகவும் வரும் தகவல்களை பார்த்தோம். மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. பேசுவதும் இல்லை. நாட்டில் உள்ள அனைவருக்கும் மத சதந்திரத்தை இந்திய அரசு உறுதி செய்து வருகிறது. தொடர்ந்து அதையே செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement