பா.ம.க.,எம்.எல்.ஏ., அருளுக்கு அடுத்தடுத்து ஷாக்; சட்டசபையில் அன்புமணி வைத்த செக்!

8


சென்னை: பா.ம.க., கொறடா பதவியில் இருந்து எம்.எல்.ஏ., அருளை நீக்க வலியுறுத்தி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்தனர்.


பா.ம.க.,வின் நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இதனால், இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் வருகின்றனர்.


அந்த வகையில், ராமதாஸின் தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ., அருளை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அன்புமணி உத்தரவிட்டார். ஆனால், அருளை நீக்க வேண்டுமானால் தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், பா.ம.க., சட்டசபை கொறடாவாக அருளே தொடர்வார் என்று ராமதாஸ் கூறியிருந்தார்.


இந்த நிலையில், பா.ம.க., கொறடா பதவியில் இருந்து எம்.எல்.ஏ., அருளை நீக்க வலியுறுத்தி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை செயலரிடம் மனு கொடுத்தனர். கட்சியின் தலைவர் அன்புமணி அளித்த பரிந்துரைக் கடிதத்தை, பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேஷ்வரன், சதாசிவம், சிவக்குமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலரிடம் வழங்கினர்.


இதற்கு போட்டியாக, பா.ம.க.,வின் கொறடாவாக தானே தொடர்வேன் என்று ராமதாஸின் ஒப்புதல் கடிதத்தோடு, சபாநாயகரை எம்.எல்.ஏ., அருளும் சந்திக்கிறார். இந்த நிலையில், பா.ம.க.,வின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமிக்கக் கோரி, அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்தனர்.

Advertisement